Last updated:
ஒரு கனவு: இலட்சிய சமுதாயத்திற்கான அகக்காட்சி
...அங்கு ஆசைகளையும் உணர்ச்சி வெறிகளையும் திருப்தி செய்வதைக் காட்டிலும் பொருள் இன்பங்களையும் சிற்றின்பங்களையும் நாடுவதைக் காட்டிலும், ஆத்மாவின் தேவைகளுக்கும், முன்னேற்ற ஆர்வத்திற்கும் அதிக முக்கியத்துவம் தேவை.
ஸ்ரீ அன்னை
ஏற்கனவே 1954-இல் ஸ்ரீ அன்னை அவர்கள் வாழ்வதற்கும் இருப்பதற்கும் ஒரு புதிய வழிமுறைக்கான மாற்று விதிமுறைகளை கூறினார். அவர் ஒரு புதிய சமுதாயம் குறித்து விவரித்தார்: சமச்சீரான, நியாயமான, இணக்கமான, உயிர்ப்புள்ள ஒரு சமுதாயம். அந்த நேரத்தில் அவர் "அத்தகைய இலட்சியத்தை தெளிவாக உணர இப்பூமி இன்னும் தயாராக இல்லை" என்று கண்டார். எனவே அதை 'ஒரு கனவு' என்று அழைத்தார். தற்போது ஆரோவில் சீராக வளர்ந்து வருகிறது, அதன் குடியிருப்பாளர்கள் அந்த இலட்சியத்தையும் அகக்காட்சியையும் தங்கள் இதயங்களிலும் மனதிலும் தொடர்ந்து சுமந்து செல்வது நம்பிக்கையை அளிக்கிறது. இச்சவால்கள் மிகப்பெரியவை மற்றும் துணிச்சலானவை. இந்த கனவு உங்கள் மனதைத் தொடும்போது, நீங்களும் எங்களுடன் இணையத் தயங்காதீர்கள்.
ஒரு கனவு
பூமியில் எங்காவது எந்த நாடும் தனது சொந்தமாக கொண்டாட முடியாத ஓர் இடம் இருக்க வேண்டும். அங்கு நல்லெண்ணமுடையோர், உண்மையான ஆர்வமுடையோர், உலகக் குடிமக்களாய் பரம உண்மையின் ஆணை ஒன்றிற்கே கீழ்ப்படிந்து சுதந்திரமாக வாழக்கூடிய இடம்; மனிதனுடைய போர்க் குணங்களையெல்லாம் அவனுடைய துன்பத்திற்கும் அவல நிலைக்கும் காரணமாக இருப்பவர்களை வெல்வதற்கு, அவனுடைய பலவீனத்தையும் அறிவையும் வென்று மேற்செல்லவும், அங்கு ஆசைகளையும் உணர்ச்சி வெறிகளையும் திருப்தி செய்வதைக் காட்டிலும் பொருள் இன்பங்களையும் சிற்றின்பங்களையும் நாடுவதைக் காட்டிலும், ஆத்மாவின் தேவைகளுக்கும், முன்னேற்ற ஆர்வத்திற்கும் அதிக முக்கியத்துவம் தேவை.
அந்த இடத்தில் குழந்தைகள் தங்கள் ஆன்மாவுடன் இடையறாத தொடர்பு கொண்டு முழுமையாக வளரவும் முன்னேறவும் முடியும். அங்கு அளிக்கப்படும் கல்வி, தேர்வுகளில் வெற்றி அடைவதற்காகவோ, சான்றிதழ்கள் பெறுவதற்காகவோ, பதவிகள் கிடைப்பதற்காகவோ இருக்காது. அதற்குப் பதிலாக ஒருவரிடம் ஏற்கனவே இருக்கும் திறன்களை வளர்க்கவும், புதிய திறன்களை வெளிக்கொணர்வதற்கு கல்வி அளிக்கப்படும். அங்கு பட்டங்கள், பதவிகளுக்குப் பதிலாக சேவை புரியவும், அனைத்தையும் சீராய் அமைக்க கூடிய வாய்ப்புகள் மட்டுமே இருக்கும். அங்கு உடலுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற ஒவ்வொருவருக்கும் ஏற்றத் தாழ்வின்றி ஒன்று போல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அங்குள்ள பொது அமைப்பில் ஒருவரது புத்திக் கூர்மை, ஒழுக்கம், ஆன்மிக மேன்மைகள் எல்லாம் வாழ்க்கை இன்பங்களையோ அதிகாரங்களையோ அதிகரிக்கப் பயன்படாது. அதற்குப் பதிலாக, அவ்வுயர்வுகளின் காரணமாக அவருடைய கடமைகளும், பொறுப்புகளும் அதிகமாகும். ஓவியம், சிற்பம், இசை, இலக்கியம் போன்ற அனைத்து வகையான கலை வடிவங்களிலும் அழகை உணரும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும். அவை தரும் இன்பத்தை அடைவது அவரவரது இரசனைத் திறனின் அளவைப் பொருத்து இருக்கும். அது அவர்களுடைய சமூக, பொருளாதார அந்தஸ்தைப் பொருத்து இருக்காது.
ஏனெனில், இந்த இலட்சிய பூமியில் பணம் தனிநாயகமாக இருக்காது. அங்கு ஒருவருடைய சொந்தத் திறமைக்குரிய மதிப்பு, பொருட் செல்வத்தினாலோ சமூக அந்தஸ்தினாலோ வரும் மதிப்பைவிட அதிக முக்கியத்துவம் பெறும். அங்கு வேலை என்பது வயிற்றுப் பிழைப்புக்குரிய வழியாக இருக்காது. அதற்குப் பதிலாக அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும், அவரது திறமைகளையும் சாத்தியக் கூறுகளையும் வளர்த்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும். அதே சமயம், அது சமூகம் முழுவதற்குமாகச் செய்யும் சேவையாகவும் இருக்கும். பதிலுக்கு சமூகம் ஒவ்வொருவரின் வாழ்க்கைத் தேவைக்கும், வேலை செய்வதற்கான செயற்களத்துக்கும் வழி செய்யும். வழக்கமான போட்டி, போராட்ட அடிப்படையில் உள்ள மனித உறவுகள், வேலைகளை ஒருவரை ஒருவர் மிஞ்சி சிறப்பாகச் செய்ய ஒத்துழைக்கவும் தேவையான மனித நேய உறவுகளாக இருக்கும்.