Last updated: 29 Aug, 2024

அன்னையின் திருச்சின்னம்

மையத்தில் இருக்கும் வட்டம் தெய்வீக உள்ளுணர்வைக் குறிக்கும்.

அடுத்து உள்ள நான்கு இதழ்கள் அன்னையின் மகாசக்திகளைக் குறிக்கும்.

அதனைச் சுற்றியுள்ள பன்னிரண்டு இதழ்களும் அன்னையின் பணியை நிறைவேற்றுவதற்காக வெளிப்பட்டுள்ள பன்னிரண்டு சக்திகளைக் (தேவியரை) குறிக்கும்.

ஸ்ரீ அன்னை

அன்னையின் நான்கு சக்திகள்

அன்னையின் நான்கு சக்திகளைப் பற்றி பேசுகையில், இந்தியாவில், பாரம்பரியமாக, படைப்பின் பரிணாமக் கொள்கை பெரும் அன்னையாக அணுகப்பட்டு, போற்றப்படுகிறது என்பதை அறிய உதவுகிறது. இந்தப் பரிணாம சக்தி வெளிப்படும் நான்கு முக்கிய சக்திகளையும் ஆளுமைகளையும் ஸ்ரீ அரவிந்தர் வேறுபடுத்துகிறார்.

மகேஸ்வரி

ஒன்று அமைதி நிறைந்த விரிவும், அகண்ட ஞானமும், தண்ணருளும், வற்றாக் கருணையும், கோப்பெரு மாண்பும், அனைத்தையும் ஆளும் மகிமையும் உருவாகக் கொண்டது.

மகாகாளி

மற்றொன்று அவளுடைய அற்புதப் பராக்கிரமம், கட்டுக்கடங்கா ஆவேசம், போர் ஆர்வம், அனைத்தையும் வெல்லும் இச்சாசக்தி, உக்கிரவேகம், அண்டம் குலுக்கும் ஆற்றல் ஆகியவற்றின் உருவமாகும்.

மகாலட்சுமி

மூன்றாவது ஒளியும் இனிமையும் கொண்ட அற்புத வடிவுடனும், அழகு, இசைவு, சந்தநயம், நுண்ணிய, வளமையான அதிசய திவ்யசம்பத்து, ஜீவனைக் கவர்ந்து ஈர்க்கும் காந்த சக்தி, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நளினம் இவற்றுடனும் விளங்குவது,

மகாசரஸ்வதி

நான்காவது ஆழ்ந்த கூர்மதியின் திறன், வழுவற்ற செயலாற்றல், எல்லாவற்றிலும் நிதானமும் திட்பமுடைய பரிபூரணம், இவற்றைக் கொண்டது.

இந்நான்கு சக்திகளைப் பற்றி மேலும் அறிய, ஸ்ரீ அரவிந்தரின் “அன்னை” என்ற சிறிய புத்தகத்தைப் படிக்கவும், அதில் அவர் தெய்வீக அன்னையின் இயல்பு, பண்பு, செயல்பாடு ஆகியவற்றைப் பற்றி விவரிக்கிறார்.

பன்னிரண்டு இதழ்களின் நிறங்கள்

20.03.1934 அன்று ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் சின்னத்தின் நிறங்கள் குறித்த விளக்கத்தை வழங்கினார்.

மையத்திற்கும் சுற்றியுள்ள நான்கு சக்திகளுக்கும் வெண்மை நிறம்;

பன்னிரெண்டு வெவ்வேறு நிறங்கள் மூன்று குழுக்களாக இருக்கும்.

1. மேல் உள்ள குழு சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு, பின் மஞ்சள் நிறம்;

2. அடுத்த குழு மஞ்சள் நிறத்திலிருந்து பச்சை நிறம், பின் நீல நிறம்;

3. மூன்றாவது குழு நீல நிறத்திலிருந்து ஊதா, பின் சிவப்பு நிறம்.”

வெள்ளை வசதியாக இல்லாவிட்டால், மையம் தங்கமாக இருக்கலாம் (தூள்).